அவுஸ்திரேலிய வானொலி நிறுவனம் ஒன்று சமீபத்தில் தனது நிகழ்ச்சிக்காக லண்டன் மருத்துவமனைக்கு போன் செய்து இளவரசி கேட் மிடில்டன் உடல்நிலை குறித்து தகவலறிந்தது.இந்திய வம்சாவழி செவிலியர் ஜெசிந்தாவிடம் இரண்டு அறிவிப்பாளர்கள் ராணி எலிசபெத் மற்றும் இளவரசர் சார்லஸ் போலவும் குரல்மாற்றி பேசினர்.
நகைச்சுவைக்கான இந்நிகழ்ச்சியில் அவர்கள் கேட்டின் மருத்துவக் குறிப்புகளையும் கேட்டனர்.
போனில் பேசியது இளவரசரும் அவரது மனைவியும் என்று நினைத்த ஜெசிந்தா மருத்துவக் குறிப்புகளை அவர்களிடம் தெரிவித்தார்.
பின்னர் இது வானொலி நிகழ்ச்சி என்பதும் வானொலி அறிவிப்பாளர்களிடம் ராணி குடும்பத்தின் குடும்ப ரகசிய விவரங்களை தான் வெளியிட்டு விட்டதும் அவருக்கு தெரிய வந்தது.
இதனால் மனமுடைந்த ஜெசிந்தா தற்கொலை செய்துகொண்டார். இந்த செய்தி உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இது அவுஸ்திரேலியா ஊடகங்களிலும் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் பயந்துபோன அந்த இரு வானொலி அறிவிப்பாளர்களும் தாங்கள் குறும்புத்தனமாக செய்த இந்த போன், ஒரு உயிரை பறித்துவிட்டதே என்று ஜெசிந்தா குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டனர்.
இந்நிலையில் அந்த வானொலி நிலையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. எங்கள் வானொலி நிகழ்ச்சி காரணமாக நடந்த இந்த தற்கொலைக்கு நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம்.
ஜெசிந்தாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் எங்கள் நிறுவனத்திற்கு வரும் விளம்பர வருமானத்திலிருந்து குறைந்தது 5 லட்சம் அவுஸ்திரேலியன் டொலர் (சுமார் ரூ. 3 கோடி) நிதியுதவியாக அவர்களது குடும்பத்திற்கு வழங்குகிறோம்.
இந்த சிக்கலான சூழ்நிலையில் ஜெசிந்தா குடும்பத்தின் ஆதரவு எங்களுக்குத் தேவை என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த வானொலி நிகழ்ச்சியை தயாரித்த மைக்கேல் கிரிஸ்டியனுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.
நாள்தோறும் நூற்றுக்கணக்கான தொலைபேசி மிரட்டல்களும், எஸ்.எம்.எஸ்.களும், கடிதங்களும் வருவதால் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை பாதுகாவலர்கள் துணையுடன் வேலைக்கு அழைத்து வந்து பின்னர் வீட்டில் கொண்டு போய் விடுகின்றனர்.
பாதுகாப்பு கருதி 10 பாதுகாவலர்களின் துணையுடன் நட்சத்திர ஹோட்டல்களில் அவர்களை தங்க வைக்க வானொலி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இதனையடுத்து மைக்கேல் கிரிஸ்டியனுக்கு வந்த கொலை மிரட்டல் கடிதங்களை '2 டே எப்.எம்.' வானொலி நிலையம் நியூ சவுத் வேல்ஸ் பொலிசாரிடம் அளித்துள்ளது.
அதில் சில கடிதங்களில் எழுதப்பட்ட வாசகங்கள், அச்சில் ஏற்றக்கூடியதாக இல்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஒரு கடிதத்தில் 'உங்களுடைய பெயர் பொறிக்கப்பட்ட தோட்டாக்கள், உங்கள் வருகைக்காக வெளியே காத்துக் கொண்டிருக்கின்றன' என எழுதப்பட்டுள்ளது.
இந்த கொலை மிரட்டல்கள் தொடர்பாக பொலிசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளதாக பிரிட்டன் பொலிஸ் உயரதிகாரி ஜேம்ஸ் ஹர்மன் தெரிவித்தார். |