அமெரிக்காவில் பள்ளிகளில் ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில் நியூடவுனில் உள்ள பள்ளியொன்றில், புகுந்த வாலிபர் 20 குழந்தைகள் உள்பட 28 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இச்சம்பவம் அமெரிக்க மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
எனவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மிகவும் அஞ்சுகின்றனர். மேலும் கொலைகாரர்களிடம் இருந்து குழந்தைகளை காக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஒகலகோமா, மிசோரி, மின்னசோடா, தெற்கு டகோடா, ஓரிகள் ஆகிய மாகாணங்களில் உள்ள பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
அதற்கான முயற்சியில் அம்மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் துப்பாக்கி எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, அங்குள்ள ஹர்ரால்டு நகர பள்ளிக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கள் குழந்தைகள் பாதுகாப்புடன் பள்ளி சென்று வருவதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளி கண்காணிப்பாளர் டேவிட் திவீட் கூறுகையில், பள்ளிக்கு பாதுகாவலரை நியமிக்க போதிய நிதிவசதி இல்லை. எனவே ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி பெற்று தரப்பட்டுள்ளது. துப்பாக்கியை கையாள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். |