ஊழல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி பதவியிழந்த இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி அடுத்த தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.இத்தாலியில் நீண்ட ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார் சில்வியோ பெர்லுஸ்கோனி. 3 முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அரசியலில் மட்டுமன்றி மீடியாசெட் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
எனினும் மாபியாக்களுடன் தொடர்பு, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், வரி ஏய்ப்பு போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டன.
மேலும் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 18 வயதுக்குட்பட்ட கரீமா என்ற சிறுமியுடன் தவறான உறவு வைத்துக் கொண்டதாகவும், அதற்காக அவர் ஏராளமான பணம் செலவிட்டதாகவும் பரபரப்பாக புகார் எழுந்தது.
இதனை தொடர்ந்து இத்தாலியில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால், பதவி விலகினார்.
வரி ஏய்ப்பு வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் திகதி பெர்லுஸ்கோனிக்கு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. எனினும் சட்ட விதிமுறைகளின்படி இவருக்கு வழங்கப்பட்ட தண்டனை ஓராண்டாக குறைக்கப்பட்டது.
இதை எதிர்த்து பெர்லுஸ்கோனி மேல்முறையீடு செய்ய உள்ளார். பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள பெர்லுஸ்கோனி அரசியலுக்கு மீண்டும் வரமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அடுத்த தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என்று அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |